மக்களும் பிளாஸ்டிக்கும் கணவன் மனைவி போல இருந்தனர் – அமைச்சர் ஜெயகுமார்

தமிழகத்தில் கணவன் – மனைவி போல இருந்த மக்களும் பிளாஸ்டிக்கும் விவாகரத்து செய்ய வேண்டிய நிலை உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 5-ம் தேதி அன்று அறிவித்தார். அதன்படி 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இந்த அரசாணையில் பால் மற்றும் பால் பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஜனவரி 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், பிளாஸ்டிக் பைகளை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என்பது தான் எங்களது தனிப்பட்ட கருத்து எனவும் அதேநேரம், தமிழக அரசு பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை பொதியப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு விலக்கு அளித்திருப்பது ஏற்க முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கணவன் – மனைவி போல இருந்த மக்களுக்கும் பிளாஸ்டிக்குக்கும் விவாகரத்து செய்ய வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தார். மேலும் பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக தடை விதிப்பது என்பது சாத்தியமில்லாதது எனவும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *