கபாலி படம் வெளியான சில நிமிடங்களில் தமிழ் கன் என்ற இணைதளத்தில் வெளியிட்ட சென்னை பொறியாளர் ஒருவரை, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் குழுவினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தமிழில் எந்த ஒரு புதிய படம் திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டாலும், அடுத்த சிலமணி நேரத்தில் அதனை உடனடியாக தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் வெளியிட்டு விடும். இதனால் தமிழ் படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் , புதிய படங்களை இணையத்தில் பதிவேற்றும் நபர்களை கண்டறிய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தகவல் தொழில் நுட்ப குழு ஒன்றை அமைத்தார். அண்மையில் வெளியான விவேகம் படத்தை விரைவாக இணையதளத்தில் வெளியிட்ட ஒருவரது ஐபி அட்ரஸை வைத்து அவர் எங்கு இருந்து இயங்குகிறார் என்பதை விஷால் குழுவினர் கண்டறிந்தனர். அவர் திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து புதிய படங்களை லேப்டாப் வாயிலாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதை கண்டறிந்து அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர் தான் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் என்று காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். திருவல்லிக்கேணி காவல்துறையினரின் விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த கவுரி சங்கர் என்பதும், எம்.இ பட்டதாரியான அவர் புதிய படம் வெளியாகும் திரையரங்கிற்கு சென்று தனது செல்போனில் படம்பிடித்து வந்து உடனடியாக தமிழ் கன் என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்ததும் தெரியவந்தது. கவுரி சங்கர் தற்போது திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கு சவால் விட்ட தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் வெளி நாடுகளில் இருந்து இயங்குவதால் அவர்களை கண்டறிவதிலும், கைது செய்வதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறப்படுகின்றது.