துடித்து இறந்த ‘பெண் கரடி’ – விஷம் வைத்து கொலையா ?

குன்னுாரில் 3 மணிநேரம் துடிதுடித்து இறந்த பெண்கரடி விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக கரடிகள் வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அந்த வகையில் குன்னுார் அருகே உள்ள பழத்தோட்டம் கிராமத்தில் 3க்கும் மேற்பட்ட கரடிகள் சுற்றித்திரிந்தன. இந்நிலையில் ஒரு கரடி பழத்தோட்டத்திலிருந்து சோகத்தொரைக்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தின் அருகே உயிருக்கு போராடி துடித்துக்கொண்டிருந்தது.

இதனைக்கண்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் வர தாமதம் ஆனது. பின்னர் வந்த கால்நடை மருத்துவர் கண்ணன் கரடிக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்க முயன்றார். ஏற்கனவே 3 மணி நேரமாக துடித்துக்கொண்டிருந்த கரடி அதற்குள் உயிரிழந்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இறந்தது 3 வயதுள்ள பெண் கரடி எனத் தெரியவந்தது. கரடி வலிப்பு ஏற்பட்டு இறந்ததா ? அல்லது யாரேனும் விஷம் வைத்து கொன்றுவிட்டார்களா ? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் கரடியை பிரேத பரிசோதனை செய்து வனத்துறையினர் அங்கேயே எரித்தனர். இதைக்காண அப்பகுதியில் மக்கள் கூடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *