ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க அப்பல்லோவுக்கு உத்தரவு

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க அப்பல்லோவுக்கு உத்தரவு

ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாள் முதல் உயிரிழந்த வரையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து சிசிடிவி காட்சிகளையும் 7 நாட்களுக்குள் சமர்பிக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் ஜெயலலிதா தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே போல் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைக்கு மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று எச்சரித்திருந்தது.

மேலும், ஆபத்தான கட்டத்தில் ஜெயலலிதா செப்டம்பர் 22-ம் தேதி  அனுமதிக்கப்பட்ட நிலையில், 23ஆம் தேதி நீர்ச்சத்து குறைபாட்டினால் பாதிப்பு என அறிக்கை வெளியிட்டதன் காரணம் என்ன?. பல உடலுறுப்புகளில் பிரச்னையோடு அனுமதிக்கப்பட்ட நிலையில் “அவர் விரும்பும் நாளில் வீடு திரும்புவார்” என செய்தியாளர்களிடம் அப்பல்லோ நிர்வாகம் கூறியது ஏன்? வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய தேவையில்லை என செப் 25-ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் சொன்னது ஏன்? சிசிடிவி காட்சி பதிவுகளை யார் நிறுத்த சொன்னது? உள்ளிட்டவைகள் குறித்து விளக்க வேண்டும் எனவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாள் முதல் உயிரிழந்த வரையில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை 7 நாட்களுக்குள் சமர்பிக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ”ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதில் இருந்து கடைசி வரை வெளியான அறிக்கைகள் அனைத்தும் மருத்துவர்கள் குழு தயாரித்து கொடுத்ததே , அதில் கையொப்பம் இட்டு வெளியிட்டது மட்டுமே நான். அதிலிருக்கும் தகவல்களின் உண்மை தன்மை குறித்தெல்லாம் எனக்கு தெரியாது . ஜெயலிதாவை அறை மாற்றியபோதும் , சோதனைக்கான லேப் அழைத்து சென்றபோதும் மட்டும் தான் சிசிடிவி இயக்கப்படவில்லை . மற்ற நாட்களில் முழுமையாக இயக்கப்பட்டது . அந்த குறிப்பிட்ட நாட்களில் சிசிடிவி இயக்க கூடாது என நிர்வாக அதிகாரியிடம் இருந்து தான் எனக்கு உத்தரவு வந்தது , அதிகாரி பெயர் தெரியவில்லை . கோப்புகளில் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், 23-ம் தேதி முதல் வெளியிட்ட மருத்துவ அறிக்கைக்கும் , ஜெயலலிதா மறைந்த பின் கொடுக்கப்பட்டுள்ள டிஸ்சார்ஜ் சம்மரியில் உள்ள தகவல்களும் ஒத்துபோகவில்லையே , அறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ளவை உண்மையா அல்லது டிஸ்சார்ஜ் சம்மரியில் இருப்பவை உண்மையா ? என்ற ஆணைய வழக்கறிஞர்களின் கேள்விக்கு ‘அதைபற்றி எனக்கு தெரியாது’ என்று சுப்பையா கூறினார்.

முன்னதாக 23.3 18 அன்று அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி கொடுத்த பேட்டியில் , ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த தளத்தில் சிசிடிவி இயக்கபடவில்லை என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *