குரங்கனி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல்

குரங்கனி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல்

குரங்கணி காட்டுத்தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தாக்கல் செய்தார்.

கடந்த மார்ச் 11ஆம் தேதி குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றபோது அவர்கள் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து, குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது.

விபத்து நடந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு நடத்திய அவர், காயமடைந்தவர்களிடமும், வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். இதன் அடிப்படையில் தயாரான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அதுல்ய மிஸ்ரா இன்று தாக்கல் செய்தார்.

குரங்கணி சம்பவத்துக்கு வனத்துறை அதிகாரிகளின் கவனக்குறைவும் காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், விபத்து காலங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சிறப்பு படை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீ எச்சரிக்கை தொழில்நுட்பத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், காட்டு தீயினால் விபத்து ஏற்படும்போது எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான standard operating procedure வழிமுறைகளை வகுக்க வேண்டும், வனப்பகுதிகளில் செயல்படும் தங்கும் விடுதிகளை முறைப்படுத்த வேண்டும், நன்கு பயிற்சி பெற்ற மலையேற்ற பயிற்சி வீரர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மொத்தம் மூன்று புத்தகங்களாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியது தொடர்பான பிரதான அறிக்கை 150 பக்கங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்கள் முறையான பயிற்சி இல்லாத ஆட்களுடன் மலையேற்றம் சென்றதும் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *