ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றிய தன்னை சிங்களவர்கள் மிரட்டியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகார் தெரிவித்துள்ளார். இதற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு கடந்த 11-ம் தேதி தொடங்கி, வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கையின், ஈழத் தமிழர்கள் பிரச்சினையும் விவாதிக்கப்படுகிறது. இதில், கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஐந்து ஆறு முறை உரையாற்றியுள்ளார்.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றிய தன்னை சிங்களவர்கள் மிரட்டியதாக வைகோ தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், மனித உரிமைக் கவுன்சிலுக்கு உள்ளேயே, இந்தியாவில் இருந்து சென்ற ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக சிங்களர்கள் சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது என்றும் இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.