பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் – உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி நடந்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 20 ஓவர்களில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் உலக லெவன் அணி எட்டு விக்கெட்கள் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி சுதந்திர தின கோப்பையை கைப்பற்றியது.