நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 500 ரூபாய் கட்டணத்தில் மின்சாரம் இணைப்பு வழங்கும் புதிய திட்டத்தை டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பாஜகவின் தாயமைப்பான ஜன சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவையொட்டி டெல்லியில் சவ்பாக்யா யோஜனா என்ற திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவில் கலந்துக்கொண்டு, அனைத்து வீடுகளுக்கும் மின்சாரத்தை உறுதிசெய்யும், சவுபாக்யா யோஜனா என்ற புதிய திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு பயனளிக்கும் வகையில், 500 ரூபாய் கட்டணத்தில் மின் இணைப்பு அளிக்கப்படும் என்றும் இந்த தொகையை பத்து தவணையாக செலுத்தலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு 16 ஆயிரத்து 320 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாட்டின் பொருளாதார நிலை சரிவை சந்தித்து வரும் நிலையில், பொருளாதார ஆலோசனைக் குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளார். 5 பேர் கொண்ட இந்த பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக, நிதி ஆயோக் உறுப்பினரான பிபேக் தேவ்ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் சுர்ஜித் பாலா, ரத்தின் ராய் மற்றும் அஷீமா கோயல் ஆகியோர் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிதி ஆயோக் முதன்மை ஆலோசகர் ரத்தன் வாட்டல், குழுவின் உறுப்பினர் மற்றும் செயலாளராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.