பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது. இக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிசமபர் 21ம் தேதி ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து திமுக சார்பில் கடந்த முறை அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மருதுகணேஷ் இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனிடையே அதிமுகவின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சி மன்றக் குழு கூடியது. இதில் சற்று சலசலப்பு ஏற்பட்டதால் வேட்பாளர் தேர்வு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மதுசூதனன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பாலகங்கா உள்ளிட்ட 8 பேர் விருப்ப மனுவை கட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று கூடும் அதிமுக ஆட்சி மன்றக் குழுவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.