திருச்சியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை இளைஞர் கத்தியால் குத்திக் கொலை. இதனை கண்ட பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் இளைஞர் படுகாயமடைந்தார்.
புதிய தமிழகம் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளவர் அய்யப்பன். இவரது மகள் மலர்விழி மீரா, திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரை அதே பகுதியில் வசித்து வரும் முரளி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். முரளிக்கு ஏற்கனவே திருமணமாகி, சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தன்னை காதலிக்கும் படி மீராவை முரளி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் மீரா மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு மீரா திரும்பிக் கொண்டிருந்த போது, மீராவை முரளி கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், அலறி சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீராவை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மீரா உயிரிழந்தார். இதனிடையே, மீராவை கத்தியால் குத்திய முரளியை அங்கிருந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் முரளி படுகாயமடைந்தார். இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் முரளியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி தில்லை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.