புதுடெல்லி,
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் கடந்த மாதம் நடந்தது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். பெங்களூருவில் வருமான வரித்துறையில் பணியாற்றி வரும் அவர் திருச்சி அருகில் உள்ள முடிகண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
ஆசிய தடகளத்தின் போது கோமதியிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனை முடிவு இப்போது கசிந்து இருக்கிறது. அதில் அவர் ‘நான்ட்ரோலோன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோமதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாட்டியாலாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேசிய பெடரேஷன் கோப்பை தடகள போட்டியில் கோமதியிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி நடத்திய ஊக்க மருந்து சோதனையிலேயே அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரிய வந்து இருக்கிறது. ஆனால் இது குறித்த தகவல் யாருக்கும் முறைப்படி தெரிவிக்கப்படவில்லை. ‘ஊக்க மருந்து சோதனை முடிவை காலதாமதமின்றி தெரிவித்து இருந்தால் இந்தியா இந்த தர்மசங்கடத்தை சந்திக்க வேண்டிய நிலை வந்து இருக்காது. ஆசிய போட்டியில் கலந்து கொள்ள கோமதியை அனுமதித்து இருக்க மாட்டோம்’ என்று இந்திய தடகள சம்மேளன நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
தன் மீதான ஊக்க மருந்து சர்ச்சையை 30 வயதான கோமதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். எனது வாழ்க்கையில் நான் ஒரு போதும் ஊக்க மருந்தை எடுத்துக் கொண்டது கிடையாது என்று கூறியுள்ள அவர் தனது ‘பி’ மாதிரியை சோதிக்க வேண்டும் என்று அப்பீல் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய விவரம் குறித்து கோமதிக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
கோமதியின் ‘பி’ மாதிரி சோதனையிலும் ஊக்க மருந்து உபயோகப்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவர் வென்ற தங்கப்பதக்கம் பறிபோவதுடன், 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும்.