உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையே லண்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜானி பேரிஸ்டோவ், ஜேசன் ராய் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே தென்னாப்ரிக்க அணி ஷாக் கொடுத்தது. அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் முதல் ஓவரை வீசினார். வழக்கமாக எப்பொழுதுமே வேகப்பந்து வீச்சாளர்கள்தான் முதல் ஓவரை வீசுவார்கள். ஆனால், உலகக் கோப்பையின் முதல் ஓவரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் வீசியுள்ளார்.
கேப்டன் டு பிளிசிஸ்-ன் இந்த ஐடியாவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே அதிரடி ஆட்டக்காரர் பேரிஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தினார் தாஹிர். பேரிஸ்டோவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.