மோர்கனின் அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
உலகக்கோப்பை தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ 90 ரன்களும், ஜோ ரூட் 88 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.மோர்கன் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளுக்கு பந்துகளை விரட்டினார். 71 பந்துகளில் 17 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் அவர் 148 ரன்களை விளாசினார். இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்தது. பின்னர் 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். எதிரணியின் பந்துகளை சமாளித்த ஹஷ்மத்துல்லா 76 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற அந்த அணி புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியது.