அடுத்த வாரம் இங்கிலாந்தில் தொடங்கும் உலக கோப்பை தொடர் மிகவும் சவால் மிக்கதாக இருக்கும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
மும்பை,
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.
உலக கோப்பை போட்டிக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியினர் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று இங்கிலாந்துக்கு புறப்படுகிறார்கள். முன்னதாக இந்திய கேப்டன் விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது 30 வயதான விராட் கோலி கூறியதாவது:-
நான் பங்கேற்கும் 3-வது உலக கோப்பை தொடர் இதுவாகும். அனேகமாக முந்தைய இரு உலக கோப்பை தொடர்களை காட்டிலும் இது தான் மிகவும் சவால் மிக்க உலக போட்டியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு அணியும், அனைத்து அணிகளுடன் மோதும் வகையில் அமைக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணையை வைத்து இதை சொல்கிறேன். மேலும் போட்டியில் களம் காணும் எல்லா அணிகளும் பலம் வாய்ந்ததாகவே காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் அணியை 2015-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை கவனித்தால் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான அணியாக உருவெடுத்து இருப்பது தெரியும். எந்த அணியும், எந்த ஒரு அணிக்கும் அதிர்ச்சி அளிக்க முடியும். இந்த ஒரு விஷயத்தை நாங்கள் மனதில் கொண்டுள்ளோம். இங்கு மெத்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களால் முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். இங்கு குரூப் வாரியான மோதல் கிடையாது என்பதால் ஒவ்வொரு ஆட்டத்திலும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். எங்களது திறமைக்கும், தரத்துக்கும் ஏற்ப ஆடினால் போதும். சாதகமான முடிவு கிடைக்கும்.
உலக கோப்பை போட்டிக்கான எங்களது அணி சரியான கலவையில் வலுவான அணியாக அமைந்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்துக்கு செல்கிறோம். அணியில் இடம் பெற்று இருக்கும் அனைவரும் ஐ.பி.எல்.-ல் நல்ல பார்மில் இருந்தனர். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். முன்கூட்டியே அங்கு பயணிப்பது நல்ல விஷயமாகும். குறிப்பாக உலக கோப்பை போன்ற தொடர்களுக்கு சீக்கிரமாகவே செல்வது பதற்றத்தை குறைக்க உதவும். இதே போல் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப நம்மை விரைவில் மாற்றிக்கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் குறுகிய வடிவிலான போட்டி அதுவும் ஐ.சி.சி. தொடரில் ஆடும் போது சீதோஷ்ண நிலை கடினமாக இருக்காது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுடன் ஒப்பிடும் போது அது வேறு சவால். உலக கோப்பை போட்டியை பொறுத்தவரை மைதானம் மற்றும் சீதோஷ்ண நிலையை காட்டிலும் ஆட்டத்தின் போது உருவாகும் நெருக்கடியை திறம்பட கையாள்வது தான் மிகவும் முக்கியமானது. முதல் ஆட்டத்தில் இருந்து முழு உத்வேகத்துடன் விளையாடி வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அது தான் சவாலானது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எங்களது பவுலர்கள் யாரும் களைப்படையவில்லை. 4 ஓவர்கள் வீசிய பிறகும் புத்துணர்ச்சியுடனே வலம் வந்தனர். ஆனால் இது 50 ஓவர் வடிவிலான போட்டி. அதற்கு ஏற்ப உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதை ஐ.பி.எல்.-க்கு முன்பே தெரிவித்து விட்டோம்.
ஐ.பி.எல்.-ல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையே என்று கேட்கிறீர்கள். அவர் இந்திய அணிக்காக பல ஆட்டங்களில் வெற்றியை தேடித்தந்துள்ளார். குறைபாடுகளை சரி செய்து கொண்டு உலக கோப்பையில் வலுமிக்கவராக வருவார். அவரும், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும் எங்களது பந்து வீச்சு வரிசையின் தூண்கள் ஆவர்.
சமீபத்தில் நடந்த இங்கிலாந்து-பாகிஸ்தான் ஒரு நாள் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு இருப்பது பற்றி கேட்கிறீர்கள். இங்குள்ள ஆடுகளங்கள் சிறப்பானதாக இருக்கும். அதனால் அதிக ரன்கள் எடுக்கப்படும் ஆட்டங்களை எதிர்பார்க்கிறோம். அதே நேரத்தில் இரு நாட்டு தொடரை உலக கோப்பையுடன் ஒப்பிட முடியாது. இது வேறு விதமானது. எனவே 260 முதல் 270 ரன்கள் வரை எடுத்தாலும் அதை கொண்டு வெற்றி பெறலாம். எல்லாமே நெருக்கடியை கையாள்வது பொறுத்து தான் இருக்கிறது. இவ்வாறு விராட் கோலி கூறினார்.
சாஸ்திரி கருத்து
பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், ‘இந்த உலக கோப்பையில் டோனியின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். இந்த வடிவிலான போட்டியில் விக்கெட் கீப்பராகவும், நெருக்கடி தருணத்தை சமாளிப்பதிலும் அவரை விட சிறந்தவர் யாரும் கிடையாது. அவருக்கும், கேப்டன் கோலிக்கும் புரிந்துணர்வு அருமையாக இருக்கிறது.’ என்றார். சூழ்நிலைக்கு தக்கபடி கணித்து விளையாட வேண்டும் என்பதே எங்களது பிரதான இலக்கு என்றும் சாஸ்திரி குறிப்பிட்டார்.