உலகக் கோப்பையின் 4வது பயிற்சிப் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே லண்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்து சொதப்பியது. 39.2 ஓவர்களிலேயே ஆல் அவுட் ஆகிய இந்திய அணி 179 ரன்களில் சுருண்டது. ஆல்வுரண்டர் ஜடேஜா மட்டும் போராடி 54 ரன்கள் எடுக்க, ஹர்திக் பாண்ட்யா 30 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். நியூஸிலாந்து அணியில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், நீஷம் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் கோலின் முன்ரோ 4 ரன்கள் எடுத்திருந்த போது, பும்ரா வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மார்டின் குப்தில் மற்றும் கேப்டன் வில்லியம்சன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 22 ரன்னில் குப்தில் அவுட் ஆக, அதன்பின்னர் வந்த ராஸ் டைலருடன் ஜோடி சேர்ந்தார் வில்லியம்சன். நிலைத்து விளையாடிய வில்லியம்சன் 67 ரன்களும், டைலர் 71 எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் 37.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து நியூஸிலாந்து அணி இலக்கை எட்டியது. இந்திய அணியில் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 2 ரன்களை மட்டுமே கொடுத்து, ஒரு விக்கெட்டை கைப்பற்றி நியூஸிலாந்தை மிரட்டினார்.