ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் திருநங்கை ஜீவா நடிக்கிறார்.
லைகா தயாரித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் முதல் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பல வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
‘தர்மதுரை’ படத்தில் நடித்த திருநங்கை ஜீவா இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை இயக்குநர் சீனு ராமசாமி உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ”தர்மதுரை படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி #திருநங்கையர் ஜீவாவுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.