ஐஐடி மாணவி தற்கொலைக் குறித்து தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற 19 வயது மாணவி சென்னை ஐஐடி-கல்வி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு எம்.ஏ பிரிவில் பயின்று வந்தார். படிப்பில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த பாத்திமா., கடந்த வெள்ளிக்கிழமை ஐஐடி நிறுவனத்தின் சரயு பெண்கள் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த வாரம் நடைபெற்ற தேர்வில் மதிப்பெண் குறைந்து போனாதால்தான் பாத்திமா தற்கொலை செய்து கொண்டார் என்று தமிழக காவல்துறையினர் வழக்கை முடித்தனர். ஆனால் பாத்திமா பயன்படுத்திய செல்போனை பரிசோதித்த அவரது தந்தை, அதில் சில ஆசிரியர்களால் மனரீதியாக, தான் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தன்னுடைய மரணத்திற்கு அந்த குறிப்பிட்ட ஆசிரியர்களே காரணம் என்றும் குறிப்பெழுதி வைத்திருந்தார். இந்த விவகாரம் கடும் அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.
கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த பிரச்சினைகளில் மாணவ மாணவிகளைத் துன்புறுத்துவது அதனால் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு இது முதன்முறையாக நிகழ்ந்துள்ளது. இனி இதுபோன்ற நிகழ்வுகள் கல்வி நிலையங்களில் நிகழாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
டெல்லி ஐஐடி-யில் சாதி, மதம் சார்ந்த துன்புறுத்தல்கள் தொடர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் மாணவி பாத்திமாவின் மரணம் அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. கல்வி நிலையங்களில் நிகழும் இதுபோன்ற மரணங்களை விசாரித்து அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த தனிப்பிரிவு ஒன்றை அரசு அமைக்க வேண்டும். அப்போதுதான் மாணவ மாணவிகள் மர்ம மரணம் குறித்த உண்மைத் தன்மை வெளிப்படும்.
கல்வி நிலையங்களில் மத ரீதியாக துன்புறுத்தப்படுவது என்பது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். கல்வி நிலையங்களில் மாணவ மாணவிகளை உடையில் கூட வேறுபடுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் சீறுடை திட்டத்தையே அரசாங்கம் கொண்டு வந்தது. ஆனால் அந்த மாணவ மாணவிகளிடம் மத ரீதியில் பாரபட்சம் காட்டுவதும், மதத்தினைச் சொல்லி துன்புறுத்துவதும் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கடுமையான நிகழ்வாகவே பார்க்க வேண்டியுள்ளது.
பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் கல்விக் கூடங்களில் மத பாகுபாட்டை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்களாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள். எனவே மாணவி பாத்திமா தன் மரணத்திற்கு காரணமாக குற்றம் சுமத்தியுள்ள சுதர்ஷன் பத்மநாபன், மிலிந்த் பிராம், ஹேமச்சந்திரன் கரா, உள்ளிட்ட பேராசிரியர்களை(?) உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
இன்னும் இவர்களைப் போன்ற மத துவேசிகளைக் கண்டறிந்து கல்வி நிலையங்களில் இருந்து களையெடுக்க வேண்டும். கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த பிரச்சினைகளைத் தூண்டும் நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகின்றது.
ஒரு பிரச்சினைக்காக தற்கொலை செய்து கொள்வது எந்த நிலையிலும் தீர்வைத் தராது என்பதை மாணவ மாணவிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். பாத்திமா லத்தீபின் மரணத்தை மதிப்பெண்ணுக்கான தற்கொலை என மூடி மறைக்க நினைக்க ஐஐடி நிர்வாகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. மாணவி பாத்திமா லத்தீபின் மரண வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைக்கின்றது.