மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை ஐ.ஐ.டி யில் முதலாம் ஆண்டு மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்திருப்பது ஆழ்ந்த வேதனையை தந்திருக்கிறது.
அவரது அலைபேசியில் தற்கொலைக்கு காரணமாக, மாணவி குறிப்பிட்டுள்ள இரண்டு பேராசிரியர்களை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த ஓர் ஆண்டில் ஐ.ஐ.டி.யில் நிகழும் ஐந்தாவது தற்கொலை சம்பவம் இது. இதன் மூலம் ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்பது உறுதியாகிறது.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இனி ஒரு சம்பவம் இது போல, இனி நடக்காதிருக்க உறுதியான நடவடிக்கைகள் அவசியமாகும். இதுபோன்ற சம்பவங்கள் உயர்கல்வி பயிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலத்த கேள்விகளை எழுப்புகிறது.
பெண்கள் மீது தொடரும் இதுபோன்ற வன்முறைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் உறுதியான , சட்ட வழியிலான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்..
வசந்தமிக்க எதிர்காலத்தை தொலைத்து, சூழ்நிலை அழுத்தங்களால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்தீப் அவர்க ளின் குடும்பத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.