நாடு முழுவதும் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு ஏதுவாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதாவை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது.
இதற்கான மாதிரி மசோதாவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செயலாளர் அனுப்பி வைத்ததுடன் தேவையான திருத்தங்கள் செய்து நிறைவேற்றும்படி அறிவுறுத்தினார்.
இதனையேற்று தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, 10 அல்லது அதற்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு இந்த அரசாணை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பணியாளர்களுக்கும் வாரத்தில் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டும், கூடுதல் நேரம் பணி புரிந்தால் அதற்குரிய ஊதியத்தை சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பணியாளரும் தினமும் 8 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கும் கூடுதலாக பணி புரியத் தேவையில்லை அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இரவு 8 மணிக்கு மேல் பெண்களை பணிக்கு அமர்த்தக்கூடாது. பெண்களை இரவு பணியில் அமர்த்தினால் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண் பணியாளர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
தொழிலாளர்களுக்கு கழிவறை, ஓய்வறை, பாதுகாப்பு அறைகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.