17-ஆவது மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் இருந்து பா.ஜ.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மக்களவை தலைவராக ஓம் பிர்லாவை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித் ஷா ஆகியோர் வழிமொழிந்தனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க. மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்து வழிமொழிந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓம் பிர்லா மக்களவையின் சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா பதவியேற்றிருப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகத் தெரிவித்தார். நீண்ட காலமாக கட்சி பணியில் ஓம் பிர்லாவோடு இணைந்து பணியாற்றியதாக கூறிய அவர், மக்களோடு இணைந்து எப்போதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஓம் பிர்லா, கோட்டா தொகுதியை கல்வி நிலையங்கள் நிறைந்த பகுதியாக மாற்றியவர் என்று தெரிவித்தார். அவரை மக்களவை சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தார். சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு டி.ஆர்.பாலு உட்பட அனைத்து கட்சி மக்களவை குழு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.