புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த குழு அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியை கட்டாயமாக்க பரிந்துரை செய்தது. இதற்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்புகள் வெளியானதை அடுத்து இந்தியை கட்டாயமாக திணிக்கும் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், கஸ்தூரி ரங்கன் குழு அளித்த பரிந்துரைகள் மும்மொழி கொள்கையை அடிப்படையாக கொண்டே அமைந்துள்ளன. குழு பரிந்துரைத்துள்ள இடைநிலை பருவக் கல்வியில் அதாவது 6 முதல் 8ம் வகுப்பு வரையில் சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் ஒன்றை கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது இருமொழி கொள்கைக்கு எதிரான மும்மொழி கொள்கை திணிப்பாகும். மேலும், இதுபோன்ற சர்ச்சைகள் வேறு என்ன உள்ளன என்பதை வரைவு அறிக்கையை முழுமையாக படித்து ஆய்வு செய்த பின்னர் தான் தெரியவரும் என்று எஸ்டிபிஐ கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதோடு வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கை தொடர்பான கருத்துக்களை ஜூன் 30ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆங்கிலம் தவிர்த்த வேறு இந்திய மொழிகளில் முழுமையாக வரைவு அறிக்கையை வெளியிடாமல் அவசர அவசரமாக கருத்துக்கேட்புகளை நடத்தி முடிப்பதன் நோக்கம் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. ஆகவே அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிடுவதோடு குறைந்தபட்சம் 6 மாத அவகாசத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும்.
டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு அளித்த முந்தைய வரைவு அறிக்கையில், இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிரான பரிந்துரைகளும், குலத்தொழில், கல்வியை காவி மயமாக்குவது, கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி மாநில உரிமைகளை முற்றிலுமாக நீக்குவது உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அதுபோன்ற மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்த புதிய வரைவு அறிக்கையிலும் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆகவே, அதனையெல்லாம் கருத்தில்கொண்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு அளித்துள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை முழுவதுமாக படித்து ஆய்வு செய்து அதுதொடர்பாக கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 6 மாதகால அவகாசம் அளிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்துகின்றோம்.