காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று, பொதுப்பணித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள், முக்கொம்பில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்வதாக தெரிவிக்கப்பட்டது. தீவுப்பகுதி என்றழைக்கப்படும் அந்த இடத்துக்கு மேலூர், ஸ்ரீரங்கம், திமிராயசமுத்திரம், கம்பரசன்கோட்டை ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டது.
இதுபோல், உத்தமர்சீலி கிராமத்தில் இருந்து காவிரி ஆற்றின் குறுக்காக வேங்கூர்பூசத்துறை படித்துறை கிராமத்திற்கும், கிளிக்கூடிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்றிமங்கலம் தண்ணீர்பந்தல் கிராமத்திற்கும் தடுப்பணைகள் அமைத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பதால், அந்த இரு இடங்களில் தடுப்பணைகள் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வு, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன? எத்தனை தடுப்பணைகள் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பொதுப்பணித்துறையின் இணை தலைமை பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.