ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி இருக்கும் கருத்து மிக முக்கியமானது என்றும், நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நிர்வாகம் சரிவர செயல்படவில்லை என்று நீதிபதிகள் செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்தனர். நீதிபதிகளின் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கட்சியின் மூத்த அரசியல்வாதிகளும் சட்ட வல்லுநர்களுமான கபில்சிபில், ப. சிதம்பரம், மனிஷ் திவாரி, சல்மான் குர்ஷித் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, நீதிபதிகள் பிரச்னையை தீர்ப்பதில் அரசு தோற்றுவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றம் உயர்மட்ட குழுவை அமைத்து இந்த விவகாரத்தை சரியான முறையில் கையாள வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.