சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்த்தெடுப்போம் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுதந்திர தின வாழ்த்து!

இந்தியா பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு 71 ஆவது
சுதந்திரநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில் நாட்டு மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

நமது நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் சமூக சமத்துவத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் நாம் எட்டவில்லை. அந்நியர்களின் பிடியிலிருந்து அரசியல்ரீதியாக நாம் விடுதலை பெற்ற போதிலும் இன்னும் பொருளாதாரரீதியாக வல்லரசுகளின் பிடிக்குள் தான் சிக்கியிருக்கிறோம். சுதந்திரமடைந்து 70ஆண்டுகள் முடிந்திருப்பதைக் குறிக்கும் விதத்திலோ என்னோவோ ஒரு டாலருக்கும் நிகரான ரூபாயின் மதிப்பு 70 ரூபாயாக சரிந்திருக்கிறது. வரலாறு காணாத இந்தப் பொருளாதார வீழ்ச்சி நமது நாடு பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து இன்னும் முற்றாக விடுபடவில்லை என்பதன் சான்றாக உள்ளது.

 

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திரத்தை நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்திய போதிலும் நமது ஆட்சியாளர்களால் இயற்றப்பட்ட கறுப்புச்
சட்டங்களும், ஆதார் போன்ற திட்டங்களும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அச்சுறுத்திக் கொண்டுள்ளன. சமூகதளத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும் பெண்களும் சிறுபான்மையினரும் சமத்துவத்துக்காகப் போராட வேண்டிய நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஜனநாயகம் என்பது தானே வளரக் கூடிய ஒரு தாவரம் அல்ல என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறியது சுதந்திரத்துக்கும் பொருந்தக் கூடியதாகும். சக மனிதர்களின் உரிமைகளை மதித்து சமத்துவத்தைப் பேணுவதே சுதந்திரத்தைப் பாதுக்காப்பதற்கான அடிப்படை.
இந்த சுதந்திர நன்னாளில் கறுப்புச் சட்டங்களை ஒழிப்பதற்கும்,  பொருளாதார சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கும், சமூக சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கும் உறுதியேற்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *