குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 40 இடங்களில் இந்த சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டு வந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் லஞ்சம் வாங்கினார் என்றும் புகார் எழுந்துள்ளது.
குட்கா அதிபர் மாதவராவ் டைரியில் உள்ள பெயர்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 40 இடங்களில் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.