சென்னை கோயம்பேடு சந்தை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது அப்பகுதியில் வசித்த குடிசைவாசிகளுக்கு அருகிலேயே மாற்று இடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த மாற்று இடத்தில் வீடுகட்டி வசித்துவந்த மைக்கேல் சுகிர்தா என்பவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயம்பேடு சந்தைக்காக கையகப்படுத்தபட்ட நிலத்தில் மைக்கேல் சுகிர்தா வசிக்கவில்லை என்றும், அந்த பகுதியில் வசித்த ஒரு குடிசைவாசிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார். மேலும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்போது, அதை சிலர் மூன்றாவது நபர்களுக்கு விற்பனை செய்துவிடுவதாக நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார். மூன்றாம் நபருக்கு விற்கப்படுவதைத் தடுக்கும் வகையில், குடிசை மாற்று வாரியாத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளை, அதன் உரிமையாளர், ஒருவேளை விற்பதாக இருந்தால், மீண்டும் அவற்றை குடிசை மாற்று வாரியத்துக்கே விற்கும் வகையில், ஒப்பந்த விதிகளில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.
2017-12-24