ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து, கட்சியில் உள்ள களைகள் அகற்றப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தேர்தல் எனும் ஆற்றின் கரையோரமாக நிற்கும் ஜனநாயகக் குழந்தையை பணநாயக முதலை அப்படியே விழுங்கும்போது எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்படுவது இயல்புதான் என்று தெரிவித்துள்ளார். ஜனநாயக நெறிகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி செயல்பட்டதற்காக திமுகவிற்கு கிடைத்துள்ள பரிசுதான், ஆர்.கே.நகரில் கிடைத்துள்ள பின்னடைவு எனவும் மு.க.ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார். இரண்டு அணிகளாய் பிரிந்து நின்றவர்கள் கொட்டிக் கொடுத்த தொகையினால், திமுக வேட்பாளரின் டெபாசிட் தொகை பறிபோயிருப்பதாகவும், ஆர்.கே நகரில் ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்ததை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆர்கே நகர் தோல்வி குறித்து ஆய்வு செய்து, பயிர் விளையும் கழனியில் உள்ள களைகள் அகற்றப்பட்டு, ஆயிரங்காலத்துப் பயிரான திமுக எந்நாளும் காப்பாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் சறுக்கல்கள் திமுகவிற்கு சாதாரணமானவை எனக் குறிப்பிட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், பணநாயகத்தால் ஏற்பட்ட தோல்வி திமுகவுக்கு அல்ல என்பதால், தொய்வின்றி பயணத்தைத் தொடர வருமாறு கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
· ஜனநாயகக் குழந்தையை பணநாயக முதலை அப்படியே விழுங்கும்போது எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்படுவது இயல்புதான்
· ஜனநாயக நெறிகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி செயல்பட்டதற்காக திமுகவிற்கு கிடைத்துள்ள பரிசுதான், ஆர்.கே.நகரில் பின்னடைவு
· இரண்டு அணிகளாய் பிரிந்து நின்றவர்கள் கொட்டிக் கொடுத்த தொகையினால், திமுக வேட்பாளரின் டெபாசிட் தொகை பறிபோயுள்ளது
· ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்ததை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது
· தோல்வி குறித்து ஆய்வு செய்து, களைகள் அகற்றப்பட்டு, ஆயிரங்காலத்துப் பயிரான திமுக எந்நாளும் காப்பாற்றப்படும்
· இடைத்தேர்தல் சறுக்கல்கள் திமுகவிற்கு சாதாரணமானவை
· பணநாயகத்தால் ஏற்பட்ட தோல்வி திமுகவுக்கு அல்ல என்பதால், தொய்வின்றி பயணத்தைத் தொடர வர வேண்டும்
இதனிடையே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை அக்கட்சி அமைத்துள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி அமைக்கப்பட்டுள்ள அந்தக் குழுவில் திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், சட்டத்துறை இணைச் செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.