ரயில் நிலைய அதிகாரிகளும், ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்களும் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியை மட்டுமே தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல் பரிமாற்றங்களை புரிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்க தொடர்பு மொழியாக பிராந்திய மொழிகளில் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில் நிலைய அதிகாரிகளுக்கும், கட்டுப்பாட்டு அலுவலருக்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்தும் நோக்கிலும், இரு தரப்புக்கும் இடையேயான தொடர்பு கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை களையும் நோக்கிலும் இந்த உத்தரவு பிறக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தாங்கள் பிறப்பிக்கும் கட்டளைகள் அனைத்தும் தெளிவானதாகவும், ரயில் நிலைய அதிகாரிகளால் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது கட்டுப்பாட்டு அலுவலர்களின் கடமை என்பதால், இத்தகைய உத்தரவு அவசியமாகிறது என்றும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிரெதிரே வந்தன. எனினும், ரயில் ஓட்டுநர்களின் துரித நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டது. கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் ரயில் நிலைய அதிகாரி ஆகியோருக்கு இடையே தொடர்புகொள்வதில் ஏற்பட்ட மொழி சிக்கலே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த உத்தரவை தெற்கு ரயில்வே பிறப்பித்துள்ளது.