ஆசிய போட்டியில் ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியினர் தடகள போட்டிகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் மஞ்சித் சிங் அபாரமாக ஓடி தங்கப்பதக்கம் வென்றார். அவரை அடுத்த வந்த மற்றொரு இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து  13-21, 16-21 என்ற செட்கணக்கில் தோல்வியை தழுவி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். உலகின் முதல் நிலை வீராங்கனையான தைபேவைச் சேர்ந்த தாய் சியுயிங் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து 6 வது முறையாக அவரிடம் சிந்து தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளிருக்கான வில் வித்தை குழு போட்டியில்  இந்திய அணி, தென்கொரிய அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

அதன்பின்னர் நடைபெற்ற ஆண்கள் அணிகள் இறுதிச்சுற்றில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதின. போட்டியின் நிறைவில் இரு அணிகளும் தலா 229 புள்ளிகள்பெற்றதால் போட்டி டை ஆனது. இதையடுத்து ஷூட் ஆப் முறையில் இரு அணிகளுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கொரிய அணி, வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

இதே போன்று டேபிள் டென்னிஸ் ஆடவர் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதன் மூலம் டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக இந்திய அணி பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இதே போன்று நடப்பு ஆசிய போட்டியில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய ஆசிய மல்யுத்த  போட்டியான, குராஷ் போட்டியில் இந்திய வீராங்கனை மலபிரபா ஜாதவ் 52 கிலோ எடைப்பிரிவில் வெண்கல  பதக்கம் வென்றார். இதே எடை பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை பிங்கி பல்ஹாரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இருபாலரும் கலந்து பங்கேற்கும் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தகுதி பெற்றார்.

செவ்வாய் கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் பெற்ற பதக்கங்களின் மூலம் இந்தியா 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கல பதக்கங்களுடன் பட்டியலில்  8-வது இடத்தை பிடித்துள்ளது.

தங்கம் – 9

வெள்ளி – 19

வெண்கலம் – 22

மொத்தம் – 50

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *