GSAT-29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV MK III-D2 ராக்கெட்

இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட அதிநவீன தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டப்படி மாலை சரியாக 5.08 மணிக்கு இஸ்ரோ இதனை விண்ணில் செலுத்தியது.  இங்கிலாந்து நாட்டின் இரண்டு செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் உதவியுடன் கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதையடுத்து, அதிக எடை கொண்ட ஜி சாட் 29 செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 – டி2 ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவும் பணியில் கடந்த சில மாதங்களாக இஸ்ரோ ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மாலை 5.08 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி மாக் 3- டி2 ராக்கெட் உதவியுடன் அதிநவீன திறன்வாய்ந்த  தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜி சாட் 29 செயற்கைகோளை இஸ்ரோ திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தியுள்ளது.இதற்கான கவுன்டவுன் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.  இந்த செயற்கைகோளானது 3,423 கிலோ எடை கொண்டதாகும்.

இந்த செயற்கைகோள் அதிநவீன திறன்கொண்ட தகவல் தொழில்நுட்பம், காஷ்மீர் போன்ற மலைபகுதிகள், அடர்ந்த காட்டுப்பகுதிகளில் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, துல்லியமாக படங்களை எடுப்பது, ஆப்டிக்கல் தொலைதொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படுகிறது. செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். வரும் காலங்களில் அனுப்பக்கூடிய செயற்கைகோள்களுக்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாகவும் அமையும். மேலும், ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட்டை விட தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரண்டு மடங்கு அதிக திறன் கொண்டதாகும். இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ராக்கெட் இஸ்ரோவின் மைல் கல்லாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *