பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்

பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தற்போது நாடு முழுவதும் இருந்து வருகிறது. தமிழகம் மட்டும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம் இடஒதுக்கீடு உச்சவரம்பு 60 சதவீதமாக அதிகரிக்கும் என்பதால், அரசியல் அமைப்பு சட்டத்தின் 15 மற்றும் 16வது ஷரத்துகளை திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்த மசோதாவின்படி, ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் உள்ளவர்கள், 1000 சதுர அடிக்கு குறைவாக சொந்த வீடு உள்ளவர்கள் பொதுப் பிரிவினராக இருந்தாலும் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றவர்கள் எனக் கூறப்படுகிறது. அதேபோல், அறிவிக்கப்பட்ட நகராட்சிகளில் 100 சதுர அடிக்கு குறைவான வீட்டு மனை கொண்டவர்கள், அறிவிக்கப்படாத நகராட்சிகளில் 200 சதுர அடிக்கு குறைவான வீட்டுமனை கொண்டவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை பெற தகுதி பெற்றவர்கள் எனக் கூறப்படும் நிலையில், மக்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *