பேஸ்புக் தலைவர் பதவியில் இருந்து மார்க் ஜூக்கர்பர்க்கை நீக்க திட்டம்

ஃபேஸ்புக் தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் ஜூக்கர்பெர்க்கை நீக்கும் திட்டத்திற்கு, பெரிய அளவிலான பங்குதாரர்களில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் மூலம் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த புகார், ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் அணுகியது உள்ளிட்ட சர்ச்சைகளை, ஃபேஸ்புக் நிறுவனம் சரிவரக் கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, ஃபேஸ்புக் இயக்குநர்கள் குழு தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் ஜூக்கர்பெர்க்கை நீக்கிவிட்டு, அதை சுயேச்சைத்தன்மை கொண்ட, பதில் சொல்லக் கடமைப்பட்ட பொறுப்பாக மாற்றவேண்டும் என்று, பெரிய அளவில் பங்குகளை வைத்திருப்பவர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தில் பெரும் எண்ணிக்கையில் பங்குகளை வைத்துள்ள பொது நிதியங்கள் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

45 லட்சம் பங்குகளை வைத்துள்ள நியூயார்க் சிட்டி ஓய்வூதிய நிதியம், 38 ஆயிரத்து 737 பங்குகளை வைத்துள்ள பென்சில்வேனியா கரூவூலம், 53 ஆயிரம் பங்குகளை வைத்துள்ள டிரில்லியம் அசெட் மேனேஜ்மெண்ட் போன்றவை இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆண்டுக்கூட்டம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ளது. அதில், ஃபேஸ்புக் தலைவர் பொறுப்பை சுயேச்சைத்தன்மை கொண்டதாக மாற்றும் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்படும். எனினும், ஃபேஸ்புக் பங்குதாரர்களுக்கு உள்ள மொத்த வாக்குரிமையில் 60 சதவீத வாக்குரிமை மார்க் ஜூக்கர்பெர்க் வசம் இருப்பதால், அவரது தலைவர் பதவிக்கு சிக்கல் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *