பெண்கள் பாதுகாப்புக்கான புதிய இலவச தொலைபேசி சேவை… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

பெண்களின் பாதுகாப்புக்கான 181 என்ற புதிய இலவச தொலைபேசி எண் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்கவும், ஆலோசனை பெறவுமான 181 என்ற தொலைபேசி சேவை டெல்லி குஜராத் போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த சேவையைத் தொடங்கும் வகையில் சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டரின் ஒரு பகுதியில் 181 சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

இந்த மையத்தில் காவல்துறை, சட்டத்துறையினர், மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள் உள்ளிட்டோர் இருப்பார்கள். இந்த மையத்தில் குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, ஈவ் டீசிங், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவை குறித்து புகார் தெரிவிக்கலாம்.

மேலும் பெண்கள் தொடர்பான அரசு திட்டங்கள், சேவைகள் குறித்த ஆலோசனைகளையும், உடல் மற்றும் மனநலம் தொடர்பான ஆலோசனைகளையும் இந்த மையத்தின் மூலம் பெற முடியும். தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் எண்களும் இந்த மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் பெண்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *