பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார்

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான அம்பரீஷ் காலமானார். அவருக்கு வயது 66.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் அம்பரீஷ் ஏராளமான கன்னடப் படங்களில் நடித்தவர். தமிழில் ரஜினி நடித்த ப்ரியா படத்தில் அம்பரீஷ் நடித்துள்ளார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அம்பரீஷ், நடிகை சுமலதாவை திருமணம் செய்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், மூன்று முறை மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் செய்தி மற்றும்ஒலிபரப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய அவர், காவிரிப் பிரச்சனையில் பதவியை ராஜினாமா செய்தார்.கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார்.

நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளால் அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அம்பரீஷ், சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது.

தகவல் அறிந்ததும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மருத்துவமனைக்கே சென்று அம்பரீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கன்னடத் திரையுலகினர் உள்பட ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டனர்.

அம்பரீஷ் மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூரில் வைக்கப்பட்டு பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

அம்பரீஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் மூலம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மனிதநேய மிக்க தனது நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.இதேபோன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பலரும் அம்பரீஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *