திருவாரூரில் 2வது நாளாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 50 சதவீத மரங்கள் அகற்றப்பட்டுவிட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கஜா புயலால் திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் 2வது நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூரை வீடுகள், ஓட்டுவீடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 33 ஆயிரத்து 237 மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மரங்களின் கிளைகள் முறிந்து சேதமடைந்துள்ளதால், திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் போர்க்களம் போல காட்சியளிக்கின்றன.

சாலைகளில் சாய்ந்த மரங்களை அறுவை இயந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 17 ஆயிரத்துக்கு அதிகமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. காலையில் திடீரென மீண்டும் மழை பெய்ததால், சிறிது நேரம் நிறுத்தப்பட்ட பணிகள், தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மரங்களை அகற்றும் பணியில் மாவட்டம் முழுவதும் 152 ஜே.சி.பி. வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

புயலின்போது, மின்கம்பங்கள சாய்ந்ததால், அவற்றை சீரமைத்து, மீண்டும் மின் விநியோகம் வழங்கும் நடவடிக்கைகளிலும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் குப்பைகளை அகற்றும் பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

கிராமப் பகுதிகளில் 54 ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனிடையே, புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவக் குழுக்கள்  நேரில் சென்று, தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *