திருச்சியில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுற்றுச்சுவர், டவரில் மோதியதால் பரபரப்பு.

திருச்சியில் இருந்து துபாய் நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விமானநிலைய டவரில் மோதி சென்றதில் 130 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறபட்டு சென்றது. இந்த விமானத்தில் விமான சிப்பந்திகள் உள்பட 130 பயணிகள் பயணித்தனர். திருச்சி விமான நிலைய ஓடுதள பாதையில் இருந்து விமானம் மேலெழும்பிய போது அங்கிருந்த வான் போக்குவரத்து கட்டுப்பாட்டிற்கான டவர் மற்றும் சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தி சேதங்களுடன் பறந்து சென்றது.

இந்நிலையில் பெரும் சப்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பாதுகாப்பு படை வீரர்கள், சம்பவம் குறித்து விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக இதுகுறித்து விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்குள்ளாக துபாய் நோக்கி கடல்பரப்பில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் அவசர காலமாக மும்பைக்கு திருப்பப்பட்டு அதிகாலை ஐந்தே முக்கால் மணி அளவில் சத்திரபதி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து விமானத்தில் பயணம் செய்த 130 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதற்கிடையில் திருச்சியில் விபத்து ஏற்பட்ட பகுதியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராசன் பார்வையிட்டு பயணிகள் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *