சர்காரில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது – ஏ.ஆர்.முருகதாஸ்

சர்கார் திரைப்படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக, மன்னிப்பு கேட்க முடியாது என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சர்கார் திரைப்பட விவகாரத்தில், முன் ஜாமீன் கோரிய இயக்குநர் முருகதாசின் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும், எதிர்காலத்தில் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சி அமைக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்கவும் அரசுத் தரப்பில் கோரப்பட்டது.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசின் நலத்திட்டங்களை விமர்சிப்பதும், இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகளை அமைப்பதும் தமது கருத்துச்சுதந்திரம் என ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பு, கருத்து கூற அனைவருக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதால், மன்னிப்புக் கோர முடியாது என்றும், இனிவரும் படங்களில் இதுபோன்ற காட்சிகளை அமைக்கப் போவதில்லை என உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முருகதாஸை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்த உயர்நீதிமன்றம், முருகதாஸ் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால், அதை விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யவும் போலீசுக்கு உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *