கிருஷ்ணா நதிநீர் தேக்கம் குறித்து துரைமுருகன் பொய் அறிக்கை – அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

கிருஷ்ணா நதிநீர் தேக்கம் குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணா நதிநீர் குறித்து, துரைமுருகன் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் தரும் வகையில், அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு புகாரை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் நிலையில், வழக்கினை திசை திருப்பும் வகையில், துரைமுருகன் முகாந்திரம் இல்லாத பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை நகரத்தின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணன் கோட்டை கண்மாய்களை இணைத்து, புதிய நீர்தேக்கம் அமைக்க 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா உத்தரவிட்டதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். அதற்காக ஆயிரத்து 485 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், ஆனால் நில உரிமையாளர்களின் வழக்கால் பணிகள் தாமதமான நிலையில், தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவுற்று, கட்டுமானப் பணிகள் 65 சதவீதம் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக் காலத்தில் சுற்றுச்சூழல் தடை நீக்க சான்று பெறப்படாமல், அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டத்தை, அதிமுக ஆட்சி முழுவீச்சில் செய்து வருவதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். எனவே கிருஷ்ணா நதி நீர் தேக்கம், கொசஸ்தலை ஆற்று தடுப்பணை ஆகியவை குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை, வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருப்பதாக, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *