காஞ்சிபுரம் மாவட்டத்தில் எருக்குழியில் 4 கற்சிலைகள் கண்டெடுப்பு, அகஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்டவையா என கிராமமக்கள் சந்தேகம்…

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள 4 கற்சிலைகள், அகஸ்தீஸ்வரர் கோயிலில் திருடப்பட்டவையாக இருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வெண்பேடு கிராமத்தில் உள்ள பழமையான அகஸ்தீஸ்வரர் கோயில் சுற்றுச்சுவரை ஒட்டிய இடத்தில் கால்நடைகளின் சாணம் சேகரிக்கப்பட்டு எருக்குழி அமைக்கப்பட்டிருந்தது. நேற்று அங்கு சாணத்தை அள்ளும்போது மண்வெட்டியில் ஏதோ கற்கள் பட்டு சத்தம் கேட்டுள்ளது. அந்த இடத்தை அகற்றி பார்த்தபோது சிலை ஒன்று காணப்பட்டது.

இதேபோல அடுத்தடுத்து மொத்தம் 4 கற்சிலைகள் அங்கு கண்டெடுக்கப்பட்டன. 3 அடி உயரத்துக்கும் மேல் இருந்த அந்த 4 சிலைகளும் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் கருடாழ்வார் சிலைகள் ஆகும். இவை அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு அகஸ்தீஸ்வரர் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. எருக்குழியில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து திருப்போரூர் வட்டாட்சியர் ராஜ்குமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு வந்த வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், வெண்பேடு கிராம நிர்வாக அலுவலர் துளசி ஆகியோரிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். சிலைகள் கிடைத்த பகுதி கோயிலுக்குச் சொந்தமான இடம் என்றும், தற்போது சிலர் ஆக்கிரமித்திருப்பதாகவும் வெண்பேடு கிராமத்தினர் கூறினர். அகத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நூறு ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அகஸ்தீஸ்வரர் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தபோது, அங்கு ஏற்கனவே இருந்த மண்டபம் ஒன்று அகற்றப்பட்டு புதுப்பிக்கப் பட்டதாகவும், அந்த மண்டபத்தில் இருந்த 25 அழகிய கற்சிலைகள் என்ன ஆனதென தெரியவில்லை எனவும் கிராமத்தினர் கூறினர். எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு தோண்டி ஆய்வு நடத்தப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் ஊரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினர் நேரில் விசாரணை நடத்த வேண்டுமெனவும் கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *