கஜா புயலின்போது லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான படகுகள், வலைகள் சேதமடைந்துவிட்டதாக மீனவர்கள் வேதனை

கஜா புயலால் கோடியக்கரை பகுதியில் நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளும், வலைகளும் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள மீனவர்கள், மீட்புப் பணிகளை மேலும் தீவிரப் படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் மீன்வளம் மிக்க கோடியக்கரை பகுதிக்கு, தரங்கம்பாடி உள்ளிட்ட பிற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் தங்கியிருந்து மீன்பிடித் தொழில் செய்வது வழக்கம். நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான 4 மாதங்களில் இந்த மீன்பிடித் தொழில் நடைபெறும். இந்நிலையில், கஜா புயலின் பாதிப்பால் இவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.

100 கிலோ மீட்டர் வேகத்துக்கும் அதிகமாக வீசிய கஜா புயலின்போது, கோடியக்கரையில் மட்டும் 500-க்கும் அதிகமான படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தப் படகுகள், காற்றில் அலைக்கழிக்கப்பட்டு, ஒன்றுக்கொன்று மோதி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வீசப்பட்டுள்ளன.

இந்த பாதிப்பில் படகுகள் சேதமுற்றதோடு, அவற்றின் என்ஜின்கள் மண்ணில் புதைந்து வீணாகியுள்ளன. கோடியக்கரையை ஒட்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு குப்பையைப் போல, உடைந்த படகுகள் ஏராளமாக கிடக்கின்றன.

மேலும், மீனவர்களின் மீன்பிடி வலைகளும் புயலில் தூக்கி வீசப்பட்டு, முள்புதர்களில் சிக்கியும், மண்ணுக்கடியில் சிக்கியும் கிழிந்து போயின. இதனால், ஒரு மீனவருக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் என இழப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர், வெளியூர் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கஜா புயலால் குப்பைகள் போல கிடக்கும் படகுகளை டிராக்டர்களில் கட்டி மீட்க முயன்று வருகின்றனர். படகுகளை சீரமைக்கவும், புதிய வலைகள் வாங்கவும் அரசு நிதியுதவி அளிக்க வேண்டுமென மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கோடியக்கரை மட்டுமின்றி, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட மீனவ கிராமங்களிலும் படகுகள், மீன்பிடி வலைகளின் நிலை இதுதான் என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மீனவ கிராமங்களில், கஜா புயல் ஏற்படுத்தி விட்டு சென்றுள்ள பாதிப்புகளை களையவும், நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும் அரசு சிறப்பு கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *