ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் பதவிக்காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்திருக்கும் உயர்நீதிமன்றம்,  சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தலைவர் மற்றும் சிறப்பு அதிகாரியாக, பொன்.மாணிக்கவேலுக்கு மேலும் ஒரு ஆண்டுகாலத்திற்கு பணி நீடிப்பு வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு விசாரணை குழு விசாரிக்கும் என கடந்தாண்டு, ஜூலை 21ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், கடந்த ஓரண்டாக்கும் மேலாக, விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கிய வழக்குகளைத் தவிர, நிலுவையில் உள்ள மற்ற அனைத்த வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில், கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்..

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, தங்களிடம் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால், சிலை கடத்தல் வழக்குகளை தங்களால் விசாரிக்க முடியாது என்றும், தற்போது, விசாரித்து ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்தது..

இறுதிவாதங்கள் முடிவுற்றதால், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. அதில், தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையில், அது பிறப்பிக்கப்பட வேண்டியதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை என்றும், கொள்கை முடிவு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். எனவே, சட்டவிதிகளுக்கு உட்பட்டு இல்லாததால், சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றும், தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஐ.ஜி பொன்.மணிக்கவேலின் பதவிக்காலத்தை மேலும் ஓர் ஆண்டுகாலம் நீட்டிப்பதாகவும், அவருக்கு தற்போது, தமிழ்நாடு அரசு அளித்த அனைத்து வசதிகளையும், தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். அதற்கான உரிய உத்தரவை டிஜிபியும், தமிழ்நாடு அரசும் பிறப்பிக்க வேண்டும் என்றும், மத்திய அரசும், சிபிஐயும் தெரிவித்துள்ளதுபோல், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பணிநீட்டிப்பு என்பது, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் நீதிபதிகள் ஆணையிட்டனர். மேலும், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் நிலை பற்றிய விவரங்கள், விசாரணை விவரங்கள் அடங்கிய அறிக்கைகளை, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், தமிழ்நாடு அரசுக்கு அளிக்க தேவையில்லை என்றும், சீலிடப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் மட்டும் தாக்கல் செய்தால் போதும் என்றும் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருக்கிறது.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல், யாருக்கும் எள்ளளவும் சிறுமை ஏற்படுத்தாமல், எவ்வித காலமும் தாழ்த்தாமல், சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து முடிக்க உள்ளதாக, தெரிவித்திருக்கிறார். மேலும், பதவிநீட்டிப்பு காலத்தில், ஊதியம் கூட பெறமால் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *