இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி சென்னை அருகே இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் அ.தி.மு.க., பாமக., பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கி உள்ளன. பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் தே.மு.தி.க.வை இடம்பெறச் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், விஜயகாந்த் தரப்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்தக் கூட்டணியை ஆதரித்து சென்னையை அடுத்த வண்டலூர் அருகே இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிற்பகல் 3.15 மணியளவில் சென்னை வரும் மோடி, ஹெலிகாப்டர் மூலம் கிளாம்பாக்கம் சென்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பின்னர் பொதுக்கூட்டத் திடலுக்கு வந்து கூட்டணியை ஆதரித்துப் பேசுகிறார். அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் என்பதால், பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடம்வரை ரோந்துப் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *