இந்தோனேசியாவில் சுனாமி: 62 பேர் பலி

இந்தோனேசியாவின் ஜாவா, சுமத்திரா தீவுகளில் சுனாமிப் பேரலையால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததுடன் 62பேர் உயிரிழந்தனர். அறுநூறு பேர் காயமடைந்தனர்.

இந்தோனேசியாவின் சுந்தா நீரிணைப் பகுதியில் உள்ள ஆனக் கிரகதாவு என்னும் எரிமலை வெடித்துப் பாறைக்குழம்பைக் கக்கி வருகிறது. எரிமலைக்குழம்பு பெருமளவில் கடலுக்குச் சென்று கடலடியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் நேற்றிரவு ஒன்பதரை மணி அளவில் 7அடி உயரத்துக்குச் சுனாமிப் பேரலைகள் எழுந்தன.

ஜாவா சுமத்திரா தீவுகளின் கடலோரப் பகுதிகளில் 7அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் நிலத்துக்குள் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகளும் கட்டடங்களும் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளும் சேதமடைந்த வாகனங்களும் கடற்கரை முழுவதும் குவிந்துகிடக்கின்றன.

இந்த இயற்கைப் பேரழிவில் 62பேர் உயிரிழந்ததாகவும் அறுநூறு பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய காவல்துறை, இராணுவம், பேரிடர் தணிப்பு முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் மீட்பு, மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தோர், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. உயரமான அலைகள் எழ வாய்ப்புள்ளதால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் டிசம்பர் 25வரை கடலோரத்துக்குச் செல்ல வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *