புதுச்சேரியில் பா.ஜ.கவினர் மூன்று பேர் எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டது செல்லும் – உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் 3பேரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகத் துணைநிலை ஆளுநர் நியமித்தது செல்லும் எனச் சென்னை  உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வக்கணபதி, சங்கர் ஆகியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆளுநர் கிரண்பேடி நியமித்தார். மூவரின் நியமனம் செல்லாது என்றும், அவர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கான சலுகைகள், வசதிகள் கோரிய முறையீடுகள் நிராகரிக்கப்படுவதாகவும், பேரவைத் தலைவர் முடிவெடுத்ததை அடுத்துப் பேரவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டார். மூவரின் நியமனத்துக்குத் தடைவிதிக்கக் கோரிப் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதேபோல் சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவுகளை ரத்துசெய்யக் கோரித் தனலட்சுமி என்பவர் பொது நல வழக்குத் தொடுத்தார்.

தங்களைப் பேரவைக்குள் அனுமதிக்க முடியாது என்ற பேரவைச் செயலாளரின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி நியமன உறுப்பினர்கள் சாமிநாதன், செல்வக்கணபதி, சங்கர் ஆகியோரும் வழக்குத் தொடுத்தனர். இந்த 3 வழக்குகளையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று வெளியிடப்பட்ட தீர்ப்பில் 3பேரின் நியமனம் செல்லும் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். 3பேரும் பேரவைக்குள் நுழையக் கூடாது எனப் பேரவைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *