கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமாருக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம்

மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா அழைப்பது, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை தாமதப்படுத்தும் முயற்சி என கர்நாடகாவுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

மேகதாது அணை குறித்து விளக்கம் அளிக்க, தமிழக அரசிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், நேற்று தெரிவித்து இருந்தார்.  இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி பெற்ற விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் மற்றும் காவிரியுடன் தொடர்புடைய மற்ற மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல், கர்நாடகாவுக்கு, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேகதாது திட்டத்திற்கு எதிராகவும், கர்நாடக அரசு மற்றும் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திற்கு எதிராகவும் தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதை குறிப்பிட்டுள்ள அமைச்சர் சி.வி.சண்முகம், தற்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பது, இந்த வழக்குகளை தாமதப்படுத்தும் முயற்சி என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், மேகதாது அணை குறித்த விரிவான ஆய்வறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும், தமிழக அரசின் ஒப்புதல் இன்றி, காவிரியின் குறுக்கே எந்த ஒரு கட்டுமான திட்டத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள அமைச்சர் சி.வி.சண்முகம், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *