டிரம்புடன் மோதல் ஜிம் மேட்டிஸ் ராஜினாமா

அமெரிக்க அதிபர் டிரம்புடனான கருத்து வேறுபாடுகளால், அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் ராஜினாமா செய்துள்ளார்.

அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில், வெளியுறவு கொள்கைகள் தொடர்பான விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுபவர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ். கடந்த 2 ஆண்டுகளாகவே, அதிபர் டிரம்புடன் ஜிம் மேட்டிசுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறும் விவகாரத்தில் இந்த மோதல் முற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஜிம் மேட்டிஸ் ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அதிபர் டிரம்புக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தங்களுக்கு இசைவான கருத்துகள் உள்ள ஒருவரை, பாதுகாப்புத்துறை அமைச்சராக பெற்றிருக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் படைக் குறைப்பு பற்றியோ சிரியாவில் இருந்து படைகளை திரும்பப் பெறும் விவகாரத்தையோ தமது கடிதத்தில் ஜிம் மேட்டிஸ் குறிப்பிடவில்லை. அதேசமயம், கூட்டு நாடுகளுடன் வலுவான நட்பை பரமாரிக்காமலும் அவற்றுக்கு உரிய மரியாதை தராமலும் அமெரிக்காவின் நலன்களையோ உலகளவில் அமெரிக்கா வகிக்கும் பங்கையோ பாதுகாக்க முடியாது எனவும் ஜிம் மேட்டிஸ் தமது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவும், ரஷ்யாவும் தங்களது சர்வாதிகார முறையை பரப்ப விரும்புவதாகவும், அமெரிக்காவும், கூட்டு நாடுகளும் இதற்கு விலை கொடுக்காமல் தவிர்க்க வேண்டுமானால், பொதுவான பாதுகாப்புக்காக அமெரிக்கா தன்னுடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜிம் மேட்டிஸ் கூறியுள்ளார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டாலும், பிப்ரவரி மாதம் இறுதிவரை பொறுப்பில் இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *