ராஜஸ்தான் , தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி எழுபத்து இரண்டு புள்ளி ஏழு விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

பத்தேபூரில் வாக்குச்சாவடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது. தெலுங்கானா மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்றது.

199 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பாஜகவும் காங்கிரசும் 130 தொகுதிகளில் நேருக்குநேர் போட்டியை எதிர்கொண்டன.

பெண்களுக்கு மட்டுமான 259 வாக்குச் சாவடிகளுடன் சேர்த்து மொத்தம் 51ஆயிரத்து 687வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட், மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், ஜோத்பூர் அரச குடும்பத்தினர் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.  சாஜா என்ற 105 வயது மூதாட்டிகூட அவரது குடும்பத்தினர் உதவியோடு தூக்கிவரப்பட்டு, தமது வாக்கினைப் பதிவு செய்தார்.

ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் பத்தேபூர் என்னுமிடத்தில் வாக்குச்சாவடி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டதில் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால் அந்த வாக்குச்சாவடியில் அரைமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. காவல்துறையினர் வந்து வன்முறையாளர்களை விரட்டியடித்தபின் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 72 புள்ளி ஏழு விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இதேபோல் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

119 உறுப்பினர் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், தெலுங்குதேசம், இந்தியக் கம்யூனிஸ்ட் ஆகியவை ஓரணியாகவும், ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. பாஜக தனித்து போட்டியிட்டது.

32 ஆயிரத்து 815 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்தனர். நக்சல் ஆதிக்கமுள்ள 13 தொகுதிகளில் மாலை 4 மணிக்கும், மீதமுள்ள தொகுதிகளில் மாலை 5 மணியுடனும் வாக்குப் பதிவு நிறைவுற்றது.

ஐதராபாத்தில் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாகட்டாவின் பெயரும் அவர் குடும்பத்தினர் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட பலரும், வேர் ஈஸ் மை நேம் என்ற ஹேஸ்டேக்குடன் டிவிட்டரில் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *