ரயில் விபத்து – கவனமின்மை , அலட்சியத்தால் நிகழ்ந்த கோரம்

அமிர்தசரஸ் அருகே ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் ஏற்பட்ட கோர விபத்துக்கான காரணம், விபத்து நடந்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில்பாதை இருந்த இடத்தில், அதுவும் ஆளில்லா ரயில்வே கிராசிங்கிற்கு வெகு அருகே தசரா கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் ரயில்வே போலீசார் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த திட்டமும் விழா ஒருங்கிணைப்பாளர்களிடம் இல்லாததும், ரயில்வே கிராசிங்கை ஒட்டி தடுப்புகளோ வேலியோ அமைக்கப்படாததும் விபத்துக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தி சாய்ந்து இரவு நேரமாகிவிட்டதால், ரயில் வந்ததை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர். ராவண வதத்தின்போது பட்டாசு வெடிக்கப்பட்டதால், காயம் ஏற்மடாமல் தப்புவதற்காக பலர் தண்டவாளத்தில் நின்றுள்ளனர்.

ரயில் வரும் போது ஒலி எழுப்பவில்லை என்றும், ஓசை எழுப்பியிருந்தால் பலர் உயிர் பிழைத்திருக்க கூடும் எனவும் காயமடைந்தவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், பட்டாசு சத்தத்தில் ரயிலின் சைரன் ஓசை கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ரயில் வேகத்தை குறைக்காமல் சென்றதால் உயிரிழப்பு அதிகளவில் ஏற்பட்டதாகவும், அங்கு வழக்கமாக நடைபெறும் திருவிழா என்பதை ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கத் தவறிவிட்டதும் விபத்துக்கான முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன.

ஆபத்தான ரயில் பாதைகளில் செல்போனில் படம் எடுப்பதையே கவனமாக கொண்ட மக்களின் அஜாக்கிரதையான போக்குதான் ஏராளமானோரின் உயிரைப் பலிகொண்டுவிட்டது. இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்,  யாரோ சிலரின் அலட்சியம், யாரோ சிலரின் பொறுப்பற்றத் தன்மை ஆகியவற்றால் 60க்கும் மேற்பட்டவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *