பீகார் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மாவைப் பிடிக்கக் காவல்துறை பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு

தலைமறைவாகியுள்ள பீகார் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மாவைப் பிடிப்பதற்காகப் பீகார், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பீகாரின் முசாபர்பூரில் காப்பகத்தில் உள்ள பெண்களை அரசியல்வாதிகளின் பாலியல் தேவைக்காகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில்  மாநிலச் சமூகநலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மாவுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர் பதவி விலகினார்.

ஆகஸ்டு 17இல் பாட்னா, பெகுசராய் ஆகிய ஊர்களில் மஞ்சு வர்மாவின் வீட்டில் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள் துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். அக்டோபர் 31முதல் மஞ்சு வர்மா தலைமறைவாகிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு தெரிவித்தது.

நவம்பர் 27ஆம் நாளுக்கு முன் மஞ்சு வர்மாவைக் கைது செய்யாவிட்டால் மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மஞ்சு வர்மாவைப் பிடிப்பதற்காக பீகார், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *