பிரதமர் மோடியின் அழுத்தத்திற்கு இணங்கி, ஈரானில் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதி – தர்மேந்திர பிரதான்

ஈரானில் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதித்ததற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளே காரணம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் ஆறாம் நாளுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இந்தியா, சீனா, தென்கொரியா, துருக்கி, இத்தாலி, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய நாடுகள் ஈரானில் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்தாலும் அவற்றின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் நலன்களைப் புறக்கணித்துவிட முடியாது எனப் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், அதற்கு இணங்கி அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கான விலையை 45விழுக்காடு ரூபாயாகவும், 55விழுக்காடு யூரோவாகவும் பெற்றுக்கொள்வது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

இப்போது முழுவதும் இந்திய ரூபாயாகவே பெற்றுக்கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளது. அந்தப் பணத்தை எந்த வங்கி வழியாக எப்படிச் செலுத்துவது என்பது குறித்து ஈரானும் இந்தியாவும் பரிசீலித்து வருகின்றன.
கச்சா எண்ணெய்க்கான விலையாக ஈரான் பெறும் ரூபாயை இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *